4.03.2024

வாழைப்பழத்தில் ஏன் விதைகள் இல்லை?



வாழை பூ ஒரு மாறுபட்ட பூங்கொத்து. இதில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் இருக்கும். பூவின் மடல் விரியும்போது முதலில் சீப்புச் சீப்பாக வருவது பெண் பூக்கள். பெண் பூவில் சூல்ப்பையும் சூல் முட்டையும் இருந்தாலும் அது கருத்தரிப்பது இல்லை.

வாழையில் மகரந்த சேர்க்கை இல்லாமலேயே வாழைக் காய்கள் உற்பத்தியாகின்றன. மகரந்தச் சேர்க்கையும் கருக்கட்டலும் நடைபெறாததால், வாழைக் காயில் விதைகள் இல்லை.
பெண் பூக்கள் வந்து முடிந்தபின் வருவன ஆண் பூக்கள். இவைக்கு அங்கு வேலை இல்லாததால் உதிர்ந்துவிடும்.
வாழையில் தண்டுப் பகுதி என்பது வாழை மடல்கள் ஒன்று சேர்வதால் உருவான போலித் தண்டு. பெரும்பாலான செடியினங்களில் தண்டுப் பகுதி மண்ணுக்கு வெளியே, சூரிய வெளிச்சத்தை நோக்கி வளரும். ஆனால், வாழையில் அது கிழங்கு வடிவில் மண்ணுக்கடியில் மட்டும் வளர்கிறது. வெளியில், செங்குத்தாக வளர்ந்து நிற்கும் தண்டு போன்ற பகுதி, இலைக் காம்புகளின் அடிப்பகுதிகள் ஒன்றன்மேல் ஒன்று பற்றி நிற்பதால் உருவாகிய பகுதியாகும்.
வளர்ந்ததும் இவற்றின் ஊடே, நடுவில் சற்றே உறுதியான நாராலானது போல் தோன்றும் தண்டுப் பகுதி மலர்க் காம்பாகி, காலக் கிரமத்தில் குலையாக வெளியே வரும். ஒரு முறை பூ தள்ளி குலை போட்டதும் வாழை மரம் மடிந்துவிடும்.
புதிய கன்றுகள் கிழங்கிலிருந்து தோன்றி வளர்ந்து குலை தள்ளும்.

- பேராசிரியர் ஆசி. கந்தராஜா

No comments: